ஈரோடு மாவட்டம், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று (1.8.2025) மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்திய 21 - வது ஈரோடு புத்தகத் திருவிழா - 2025 ஐ தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார்.
மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி அவர்கள் தெரிவித்தாவது,
"இன்றைய தினம் மாவட்ட நிர்வாகம் சார்பில் பொது நூலகத்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 21 வது ஈரோடு புத்தகத் திருவிழா 2025 ஐ தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 21- வது ஈரோடு புத்தகத் திருவிழா 2025 ஆகஸ்ட் 01 முதல் 12 வரை 12 நாட்கள் நடைபெற உள்ளது. இப்புத்தக கண்காட்சியில் சுமார் 230 அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. சென்னைக்கு அடுத்தப்படியாக ஈரோட்டில் தான் மிகப்பெரிய அளவிலே புத்தகத்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழா நடைபெற ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாணவ, மாணவியர்களிடம் சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி, பல்வேறு அலுவலர்களுடன் கலந்தாலோசித்து சிறப்பான முறையில் நடத்திடும் வகையில் ஏற்பாடு செய்திருக்கிறார். இத்தகைய ஏற்பாட்டினை செய்து கொடுத்த ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு எனது பாராட்டுக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்புத்தகத்திருவிழாவில், "மண்ணுயிர் நுண்ணுயிர் உன்உயிர்", "எனைத்தானும் நல்லவை கேட்க", மக்கள் சிந்தனையில் நல்ல மாற்றத்தைப் பெரிதும் தருவது பேச்சா? எழுத்தா? பாட்டா? திரையா?, "ஊருக்கு நல்லது சொல்வேன்" "வையத்து வாழ்வாங்கு வாழ்பவர்", "அறிவியல் மேதை ஜி.டி.நாயுடு விருது" வழங்கும் நிகழ்வு கருத்துரை, "நெய்த நூலும் நெய்யாத நூலும்", "இலக்கியத்தில் உயிர் நேயம்", "புதுக்கருத்தும் பொதுக்கருத்தும்" "தமிழருக்கில்லை தமிழ்", "அறிவை விரிவு செய்", "குழந்தைகளோடு கதையாடு படைப்பாளிகளைப் போற்றுவோம், "சங்கத் தமிழின் தொன்மை", "எண்ணம் போல் வாழ்க்கை", "நாடகம் வளர்த்த தேசியம்", "தென்றலிலே புறப்பட்ட தீப்பிழம்பு" உள்ளிட்ட தலைப்புகளில் 01.08.2025 முதல் 12.08.2025 வரை நாள்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலத்தில் உள்ள அனைத்துத் தலைசிறந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகப் பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும், புத்தக கண்காட்சிக்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் வருகை புரிவதற்காக பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளும் மற்றும் பொதுமக்கள் வருவதற்காக, போக்குவரத்து வசதி மற்றும் காவல்துறை மூலம் பாதுகாப்பு வசதி மற்றும் மருத்துவ வசதி ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தக திருவிழா ஆண்டிற்கு ஒருமுறைதான் நடத்தப்படுகிறது. எனவே இப்புத்தக கண்காட்சியை பொதுமக்கள், மாணவியர்கள் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மற்றும் அரசுப் போட்டித் தேர்வுகளுக்கு பயிலும் மாணவ, மாணவியர்கள், இளைஞர்கள் என அனைவரும் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டும்.
மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆகியோர் ஈரோடு மாவட்டத்திற்கு எண்ணற்ற வளர்ச்சி திட்டப்பணிகளை அறிவித்து சிறப்பாக அதனை செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கல்வியறிவில் சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஈரோடு, பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில், தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டு இடத்தில் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் நூலகம் அமைக்கவும், முனிசிபல் காலனி மற்றும் ஈரோடு மாவட்டம் கள்ளிப்பட்டி பகுதியில் டாக்டர்.கலைஞர் அவர்களின் சிலை அமைக்கப்பட்டுள்ள இடங்களிலும் நூலகங்கள் அமைக்க உத்தரவிட்டார். அதன்படி, அமைக்கப்பட்டுள்ள நூலகங்களில் மாணவ, மாணவியர்கள் படித்து பயன்பெற்று வருகின்றனர். மேலும் பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தில் படித்து 12-க்கும் மேற்பட்டோர் போட்டித் தேர்வுகளில் வெற்றிபெற்று பயனடைந்துள்ளனர். அவ்வாறு பயன்பெற்ற மாணவர்கள் வெற்றி பெற வழிவகை செய்து தந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.
இவ்விழாவில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி.சந்திரகுமார், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின், துணை மேயர் வே.செல்வராஜ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சுப்பாராவ், மாவட்ட நூலக அலுவலர் சு.சாமிநாதன், மக்கள் சிந்தனைப் பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன், பப்பாஸி தலைவர் சேது சொக்கலிங்கம், படைப்பாளர்கள், வாசகர்கள், பதிப்பகத்தினர்கள், மாணவ, மாணவியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, அவர்கள் வீரப்பன் சத்திரம், சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் இன்று (01.08.2025 ) பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களின் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் விதமாக நடைபெற்ற புத்தக வாசிப்பு இயக்க நிகழ்ச்சியினை தொடங்கி வைத்து, மாணவ, மாணவியர்களுடன் அமர்ந்து புத்தகம் வாசித்தார்.