Type Here to Get Search Results !

திண்டல் பகுதியில் ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை துவக்கி வைத்து, முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்த அமைச்சர்...

ஈரோடு மாநகராட்சி, திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று (07.10.2025)  ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினையும் துவக்கி வைத்து மற்றும் ரூ.64.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடங்களையும், ரூ.23.00 இலட்சம் மதிப்பீட்டில் கீழ்திண்டல் நியாய விலைக்கடைக்கு புதிய கட்டிடத்தினையும் மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தாவது,

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழவதும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். உதாரணமாக, வெளிநாடு பயணத்தின் மூலம் பல்வேறு தொழில் முதலீட்டுகளை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்துள்ளார்கள். இதன் மூலம் எண்ணற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. மேலும், ஈரோடு மாவட்டத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கி வருகிறார்கள். சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மிகப்பெரிய அளவில் விளையாட்டு மைதானம், நூலகம் மாணவ, மாணவியர்கள் போட்டித் தேர்வுகளுக்கு பயில பயிற்சி மையம், அருள்மிகு திண்டல் வேலாயுதசாமி திருக்கோயிலில் மிகப்பெரிய முருகன் சிலை அமைக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஈரோடு மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் அறிவித்தபடி, 76 குடும்பங்கள், 30 மாணவர்கள் படிக்கின்ற ஒரு நடுநிலை பள்ளியும் ஒரு கோவிலும் உள்ளடக்கிய மற்றும் சென்னம்பட்டி வனப்பகுதி எல்லைக்குள் 3600 அடி உயரத்தில் அமைத்துள்ள கத்திரிமலை கிராமத்திற்கு ரூ.3.32 கோடி மதிப்பீட்டில் மின்சாரம் வழங்கும் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் ஈரோடு மாநகராட்சி வார்டு 30 திண்டல் பகுதியில், திண்டல்மலை நகரக் கூட்டுறவு கடன் சங்கத்தின் கீழ் இயங்கும் கீழ்திண்டல் நியாய விலைக்கடைக்கு புதிய கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நியாயவிலைக்கடையில் 851 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், 139 சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களும், 3 காவலர் குடும்ப அட்டைதாரர்களும், 26 கௌரவ குடும்ப அட்டைதாரர்களும் பயன்பெற்று வருகின்றனர். மேலும், முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 46 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நியாய விலைக் கடை குறைந்த இடவசதி கொண்டு வாடகை கடையில் செயல்பட்டு வந்த நிலையில் இப்பகுதியிலுள்ள பொதுமக்கள் சொந்தமாக புதிய நியாய விலைக் கடை கட்டிடம் கட்டித் தருமாறு கோரிக்கை வைத்ததின் அடிப்படையில் ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் நிதி திட்டம் 2024-2025-ன் கீழ் திண்டல் ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் புதிய நியாய விலைக்கடை கட்டிடம் ரூ.23.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மேலும், வார்டு எண் 30, திண்டல் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் மற்றும் ஈரோடு ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் ஆகியோரின் பங்களிப்புடன் ரூ.64.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். மேலும், அதே பள்ளியில் மாநகராட்சி கல்வி நிதியிலிருந்து ரூ.35.00 இலட்சம் மதிப்பீட்டில் கூடுதலாக 2 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கான பணிகளும் என ரூ.1.22 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற மற்றும் புதிய திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

தொடர்ந்து, மாண்புமிகு வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் கூரபாளையம், கூரை மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமினை நேரில் சென்று பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று குறைகளை கேட்டறிந்தார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச. கந்தசாமி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே. ஈ. பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி. சி. சந்திரகுமார், துணை மேயர் வே.செல்வராஜ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின்,  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கோ.சுப்பாராவ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் கந்தராஜா, துணை ஆணையர் தனலட்சுமி, ஈரோடு மாநகராட்சி மண்டல குழுத்தலைவர்கள் பி. கே. பழனிச்சாமி (1-ம் மண்டலம்), சசிகுமார் (3-ம் மண்டலம்) ஆகியோர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.