Type Here to Get Search Results !

வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் ஆய்வு...

ஈரோடு மாவட்டம் வித்யா நகர் திண்டல் மேடு பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் இன்று (03.10.2025) வேளாண்மை இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாநில பூச்சிக்கொல்லி குறியீட்டு மையம், மண் பரிசோதனை நிலையம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையம், விதை பரிசோதனை நிலையம், மாநில அக்மார்க் ஆய்வகம், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை ஆகிய அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

மாவட்ட ஆட்சித் தலைவர்  பூச்சிக்கொல்லி குறியீட்டு மையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.மண் பரிசோதனை நிலையத்தில் மண் மாதிரிகள் பெறப்பட்டு ஆய்வு செய்யப்படுவதன் மூலம் விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படுதல் மற்றும் உரப் பரிந்துரைகள் செய்தல் குறித்து கேட்டறிந்தார்.மேலும் நடமாடும் மண் பரிசோதனை வாகனத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டு அறிந்தார்.

தொடர்ந்து நீர் மாதிரிகளில் கார, அமில நிலை நேர். எதிர் அயனிகளின் தன்மை பார்க்கப்பட்டு அதற்கேற்ப பயிர் பரிந்துரை செய்யப்படுகிறது. மண் மாதிரிக்கான ஆய்வுக் கட்டணமாக ஒரு மண்மாதிரிக்கு ரூ.30/- ம். ஒரு நீர் மாதிரிக்கு ரூ.30/- விவசாயிகளிடமிருந்து கட்டணமாகப் பெறப்படுகிறது. மண் பரிசோதனை செய்து பயிர்களுக்கு கிடைக்கும் சத்துகளின் நிலையை கண்டறிந்து அதற்கேற்ப உர சிபாரிசு செய்து அதிக மகசூல் பெற வழிவகை செய்யப்படுகிறது. பாசன நீர் மாதிரிகளை ஆய்வு செய்து அதில் கரைந்துள்ள உப்புக்களின் நிலைக்கு தக்கவாறு பரிந்துரை செய்யப்படுகிறது. மண் பரிசோதனைகளின் மூலம் களர், உவர், அமில நிலங்களை கண்டறிந்து அதற்கேற்றவாறு நிலச்சீர்திருத்தம் செய்ய அறிவுரை வழங்கப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து விதை நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு விதை முளைப்புத் திறன் பரிசோதனைகளின் பல்வேறு நிலைகள் ஆய்வு செய்தார். மேலும் விதைகளின் புறத்தூய்மை, ஈரப்பதம் முளைப்புத் திறன் மற்றும் பிற இரக கலப்பு ஆகிய காரணிகளின் வாயிலாக விதைத்தரம் பேணப்படுவது ஆய்வு செய்தார். விதை முளைப்புத்திறன் அறையை  (Germination Room) பார்வையிடப்பட்டு அறையின் ஈரப்பதம், சுருள்தாள், மடிப்புத்தாள், தாள்மேல் விதைப்பு மற்றும் மணல் விதைப்பு போன்ற விதைப்பரிசோதனை முறைகள் ஆய்வு செய்தார். மேலும் சுருள் தாள் விதைப்பு முறையில் நெல் விதைமாதிரி விதைப்பு செய்வதை ஆய்வு செய்தார்.


இதனை தொடர்ந்து மாநில அக்மார்க் ஆய்வகத்தில் நாட்டு சக்கரை, கடலை எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய் வகைகள், மஞ்சள் கலப்படம் கலந்திருப்பது கண்டுபிடிப்பு மற்றும் லேபிள் சர்டிபிகேட் தர கட்டுப்பாடு செய்யப்படுவதையும் ஆய்வு மேற்கொண்டார். மேலும், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை,  தோட்டக்கலைத்துறை ஆகிய அலுவலகங்களில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பாரமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை ஆய்வு செய்தார். மேலும் பயன்பாடில்லாத பொருட்களை கழிவு நீக்கம் செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது வேளாண்மை இணை இயக்குநர்  சிவக்குமார்,  தோட்ட கலைத்துறை துணை இயக்குநர் குரு சரஸ்வதி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை) லோகநாதன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.