ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில், தெற்கு ரயில்வே, சேலம் கோட்டம், தேசிய பேரிடர் மீட்புப் படையுடன் (NDRF) இணைந்து நடத்திய கூட்டு ஒத்திகை பயிற்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் இன்று (18.12.2025) நேரில் பார்வையிட்டார்.
இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படும் பேரிடர்களுக்கு சிறப்புமிக்க முறையில் பதிலளிக்கும் நோக்கத்திற்காக தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) உருவாக்கப்பட்டது. அரக்கோணத்தில் உள்ள NDRF பட்டாலியன் தெற்கு ரயில்வேயுடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது. ரயில் விபத்துகள் குறித்த வழக்கமான கூட்டங்களும் ஒத்திகை பயிற்சிகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த பயிற்சிகள் மீட்பு நடவடிக்கைகளில் ரயில்வே ஊழியர்களின் திறனை மேம்படுத்துவதற்கும், இந்திய ரயில்வேயின் பெட்டிகளைப் பற்றி NDRF புரிந்துகொள்வதற்கும் பெரிதும் உதவுகின்றன. இந்த பயிற்சிகளின் ஒரு பகுதியாக, இன்று ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் ஒரு கூட்டு ஒத்திகை பயிற்சி நடத்தப்பட்டது. இந்த கூட்டு ஒத்திகை பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டார்.
இந்த கூட்டு ஒத்திகை பயிற்சியின் ஒரு பகுதியாக, ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்தில் 'விபத்து போன்ற ஒரு சூழ்நிலை' உருவாக்கப்பட்டது. அதன்படி, ஒரு ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டபடி ஏற்பாடு செய்து, இது குறித்து ரயில் மேலாளர் நிலைய மாஸ்டருக்குத் தகவல் தெரிவிப்பது போன்றும், நிலைய மாஸ்டர் உடனடியாக சேலத்தில் உள்ள கோட்டத் தலைமையக அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவிப்பது போன்றும், கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர்கள் உடனடியாக கோட்ட ரயில்வே மேலாளர் (DRM), கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் (ADRM) மற்றும் பிற அலுவலர்களைத் தொடர்புகொண்டு, இந்த விபத்து குறித்துத் தெரிவிப்பது போன்றும், கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்திற்கு விரைந்த நிலையில், கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் மற்றும் பிற அலுவலர்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்து, பாதிக்கப்பட்ட பிரிவில் ரயில்களின் இயக்கம் மற்றும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைப்பது போன்றும்,
தொடர்ந்து, இந்த விபத்து குறித்த தகவல் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதுடன், அரக்கோணத்தில் உள்ள NDRF-க்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது போன்றும், ரயில்வேயின் பல்வேறு துறைகள் உடனடியாகச் செயல்படத் தொடங்கியது போன்றும், ரயில்வே மருத்துவமனையின் மருத்துவக் குழு மற்றும் இயக்கம், இயந்திரவியல், சிக்னல், மின்சாரம், பொறியியல் மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) மற்றும் அரசு ரயில்வே காவல்துறை ஆகிய துறைகளின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து, வகுக்கப்பட்ட நடைமுறைகளின்படி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டவாறு கூட்டு ஒத்திகை பயிற்சி செய்து காண்பித்தனர்.
இந்த கூட்டு ஒத்திகை பயிற்சியின் போது, சம்பந்தப்பட்ட பல்வேறு குழுக்களின் செயல்பாடு மற்றும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் அவர்களின் செயல்திறன் பதிவு செய்யப்பட்டு பகுப்பாய்வு செய்யப்பட்டது. இத்தகைய கூட்டு ஒத்திகை பயிற்சிகளின் நோக்கம், பல்வேறு பங்குதாரர்களிடையே பேரிடர் மேலாண்மைக்கான தயார்நிலை கலாச்சாரத்தை ஏற்படுத்துவதாகும். பேரிடர் மேலாண்மைத் திட்டங்களை மதிப்பாய்வு செய்து மதிப்பிடுதல், நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் செயல்திறனைக் கண்டறிதல், வளங்கள் மற்றும் தகவல் தொடர்புகளில் உள்ள குறைபாடுகளை அடையாளம் காணுதல், விரைவாகப் பதிலளிக்கும் திறனை மேம்படுத்துதல் மற்றும் பேரிடர்களின் தாக்கத்தையும் மனித உயிரிழப்புகளையும் குறைத்தல் ஆகியவை இந்தக் கூட்டு ஒத்திகை பயிற்சிகளின் முக்கிய நோக்கங்களில் அடங்கும்.
இந்த கூட்டு ஒத்திகை பயிற்சியின் போது, சேலம் கோட்டத்தின் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னா லால், கோட்ட பாதுகாப்பு அலுவலர் ஏ.ராமச்சந்திரன் மற்றும் ரயில்வே அலுவலர்கள், ஊழியர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.
%20(1).jpg)
.jpeg)
.jpg)
%20(1).jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)