Type Here to Get Search Results !

புதிய தொழில் முனைவோருக்கான கடனுதவிகளை கலெக்டர் வழங்கினார்.


ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மற்றும் கலைஞர் கைவினைத் திட்டங்களுக்கான விழிப்புணர்வு மற்றும் வசதியாக்கல் முகாம், மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி  அவர்கள் தலைமையில் இன்று (18.12.2025) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது,


தமிழ்நாடு அரசு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், முதல் தலைமுறை தொழில் முனைவோரை தொழில் முனைவோராக்கும் திட்டம், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை தொழில் முனைவோராக்கும் திட்டம் ஆகிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் கடந்த நிதியாண்டு முதல், 25 வகையான கைவினைஞர்களை ஊக்குவிக்கும் பொருட்டு "கலைஞர் கைவினைத் திட்டம்" செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்சமயம், தமிழ்நாட்டைச் சார்ந்த மகளிர் மற்றும் திருநங்கைகள் தொழில் முனைவராக்க, "தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் (TWEES)' என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஆர்வமுள்ள பெண்கள் தொழில் முனைவோராக ரூ.10 லட்சம் வரையில் திட்ட மதிப்பீடு உள்ள வியாபாரம். சேவை மற்றும் உற்பத்தி சார்ந்த தொழில்களை 25 சதவீதம் மானியத்துடன் அதிகபட்சமாக ரூ.2 லட்சம் வரை பெற்று தொழில் தொடங்கலாம். இத்திட்டத்தை ஈரோடு மாவட்டம் முழுவதும் சிறப்பாக செயல்படுத்த ஊராட்சி ஒன்றிய அளவில் விழிப்புணர்வு மற்றும் கடன் வசதியாக்கல் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை ஈரோடு, பவானி, அந்தியூர். சத்தியமங்கலம், பவானிசாகர் மற்றும் சென்னிமலை வட்டாரங்களில் இவ்வசதியாக்கல் முகாம்கள் நடத்தப்பட்டு, தொழில் தொடங்க ஆர்வமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அன்றைய தினமே இணையத்தில் இலவசமாக பதிவு செய்து வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக, இன்றைய திம் தமிழ்நாடு மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்ட விழிப்புணர்வு மற்றும் கடன் வசதியாக்கல் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமிற்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து வருகை புரிந்திருக்கும் 200க்கும் மேற்பட்ட பெண் தொழில் முனைவோர்கள் புதிதாகத் தொழில் தொடங்க ஆலோசனைகள் வழங்கி, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வசதியாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக அளவில் ஜவுளி சார்ந்த வியாபாரம், உற்பத்தி மற்றும் உணவு சார்ந்த உற்பத்தி, சேவை மற்றும் வியாபார நிறுவனங்கள் தொடங்க பெண்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். அவர்களுக்கு தேவையான வங்கிக்கடன் பெறுவதற்கு 18.12.2025 நடைபெற்ற மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் குழு கூட்டத்தில் வசதியாக்கல் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தில் இதுவரை 500 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கடந்த 10 நாட்களில் இணையதளம் மூலமாக பதியப்பட்டுள்ளது என தெரிவித்தார். மேலும், இக்கூட்டத்தில், குறு. சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு குறித்த காலத்தில் தாமதமின்றி நேரடி மற்றும் அரசின் திட்டங்களின் மூலம் கடன் வசதி செய்து தர அனைத்து வங்கிகளின் பங்களிப்பினையும் உறுதி செய்ய வேண்டும் என வங்கி மேலாளர்கள் மற்றும் அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.


தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், 20 புதிய தொழில் முனைவோர்களுக்கு (கயிறு தயாரித்தல், பால் பண்ணை, பேக்கரி தயாரிப்பு, உணவு பதப்படுத்துதல், நான்கு சக்கர பழுது நீக்க மையம், கனரக வாகனம், பால் பொருட்கள் தயாரிப்பு, தையல் தொழில், பெயிண்டிங்) உள்ளிட்ட தொழில் தொடங்க ரூ.16 கோடி மதிப்பீட்டிலான கடனுதவிகளை வழங்கினார்.


இக்கூட்டத்தில், பொது மேலாளர் (மாவட்ட தொழில் மையம்) முருகன், உதவி பொது மேலாளர் ரிசர்வ் வங்கி, நபார்டு வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் விவேகானந்தன், வங்கிகளின் மண்டல அளவிலான அலுவலர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.