Type Here to Get Search Results !

மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தினை மாவட்ட முதன்மை நீதிபதி மற்றும் கலெக்டர் திறந்து வைத்தார்கள்.


ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கம் மூன்றாவது தளத்தில் இன்று (05.01.2026) 9- வது சித்த மருத்துவ தின விழா மற்றும் மாவட்ட சித்த மருத்துவ அலுவலகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர்  ச.கந்தசாமி அவர்கள் திறந்து வைத்து, சித்த மருத்துவ கண்காட்சியினை பார்வையிட்டார்.
 

இன்றைய தினம்  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்  9- வது சித்த மருத்துவ தின விழாவினை முன்னிட்டு, மூலிகை கண்காட்சி மருந்து மூலச்சரக்குகள் கண்காட்சி, சித்த மருந்துவ நுாலக கண்காட்சி, சிறப்பு மூலிகைகள் கண்காட்சி, பாராம்பரிய அரிசி வகைகள் கண்காட்சி, பாராம்பரிய விளையாட்டு கண்காட்சி, பாராம்பரிய எண்ணெய்  வகைகள் கண்காட்சி, பாராம்பரிய  சர்க்கரை வகைகள் கண்காட்சி, மருத்துவ பயன் கொண்ட மண் வகைகள் கண்காட்சி,  சிறுதானிய உணவு வகைகள் கண்காட்சி,   பால் வகைகள் கண்காட்சி ஆகியவை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிபடுத்தப்பட்டதை பார்வையிட்டார்.
மேலும், தமிழ்நாடு அரசின் சித்த மருத்துவ திட்ட கண்காட்சியில் (மகப்பேறு சஞ்சீவி திட்டம், பள்ளி இளம் தளிர் திட்டம், தொற்றா நோய் தடுப்புத்திட்ட கண்காட்சி) மருந்து கண்காணிப்பு மைய கண்காட்சி ஆகியவை நடைபெற்றன. இம்முகாமில் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை மாவட்ட முதன்மை நீதிபதி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டனர்.


இங்கு நடைபெறும் சிறப்பு சித்த மருத்துவ முகாமில் பொது மருத்துவம், தொற்றா நோய் மருத்துவம், வர்ம மருத்துவம், தோல் மருத்துவம், புற சிகிச்சை மருத்துவம், என பல்வேறு வகையான நோய்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு, உணவு உட்கொள்வது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டன. 


தொடர்ந்து, இன்றைய தினம், நடைபெற்ற  சித்த மருத்துவ முகாமில் மகப்பேறு சஞ்சீவி திட்டத்தின் மூலம் 3 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சுகப்பிரவசம் உண்டாக்கும் விதமாக 11 வகை மருந்துகள் அடங்கிய மகப்பேறு சஞ்சீவி மருந்து பெட்டகம், மக்களை தேடி மருத்துவ திட்டத்தின் மூலம்  சர்க்கரை நோய் அதிகுருதி அழுத்தம் உள்ள  4 நபர்களுக்கு  மது மேக சூரணம், ஆவாரைக்குடிநீர் சூரணம், சர்ப்பகந்தா மாத்திரை போன்ற  மருந்துகள் அடங்கிய பெட்டகமும், பள்ளிக் குழந்தைகள் இளந்தளிர் திட்டத்தின் மூலம் இரத்தசோகை குறைபாடு, கற்றல் திறன் குறைபாடு, கருப்பை சார்ந்த நோய்களுக்கு அன்னபேதி மாத்திரை, நெல்லிக்காய் லேகியம், வல்லரை மாத்திரை, குமரி லேகியம், பெமிகியூர் சிரப் ஆகிய மருத்துகள் அடங்கிய மருந்து பெட்டகம் வழங்கப்பட்டது. 


மேலும், இம்முகாமில், கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு நில வேம்பு குடிநீர், கபசூர குடிநீர், முட வாட்டுக்கால் சூப், கற்றாழை பானம், நன்னாரி மணப்பாகு ஆகிய பானங்கள் வழங்கப்பட்டன. இம்முகாமில், கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு சிறப்பு சிகிச்சையாக வர்ம சிகிச்சை, நசிய சிகிச்சை, ஒற்றட சிகிச்சை, தொக்கண சிகிச்சை, வேது சிகிச்சை, பற்று சிகிச்சை, அகசிவப்பு கதிர் சிகிச்சை, பாத சிகிச்சை ஆகிய சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், சித்த மருத்துவ முகாமில் 638 பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு, பயனடைந்தனர்.


இந்நிகழ்வில், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மரு.ராமச்சந்திரன், மாவட்ட இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.ச.சாந்தகுமாரி, உதவி சித்த மருத்துவ அலுவலர்கள், மரு.கண்ணன், மரு.லெனின், மரு.சுடர்க்கொடி உட்பட துறை சார்ந்த சித்த மருத்துவ அலுவலர்கள் மருந்தாளர்கள், அலுவலக பணியாளர்கள் மருத்துவமனை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.