Type Here to Get Search Results !

சமூக நலத் துறையின் சார்பில் குழந்தை திருமணத் தடை, விழிப்புணர்வு பேரணி........


 ஈரோடு மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (07.01.2026) சமூக நலத் துறையின் சார்பில், குழந்தை திருமணம் தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி  அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
 


இந்த விழிப்புணர்வு பேரணியில் 450- க்கு மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு, அடைவோம்! அடைவோம்! ஈரோடு மாவட்டம் குழந்தைத் திருமணம் இல்லாத நிலையை அடைவோம்! கெடுக்காதீர்கள்! கெடுக்காதீர்கள்! குழந்தைத் திருமணம் நடத்தி குழந்தைகளின் வாழ்வை கெடுக்காதீர்கள்! வேண்டாம்! வேண்டாம்! "புத்தகம் சுமக்கும் பருவத்தில் குழந்தையை சுமக்க வேண்டாம்! நிறுத்துங்கள்! நிறுத்துங்கள் குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்துங்கள்! தடுப்போம்! தடுப்போம்| குழந்தைத் திருமணத்தைத் தடுப்போம்! கொடுப்போம்! கொடுப்போம்! குழந்தைத் திருமணத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் பறிக்காதீர்கள்! பறிக்காதீர்கள்! குழந்தை திருமணம் செய்து வைத்து குழந்தையின் உரிமையை பறிக்காதீர்கள் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த பேரணியானது, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை வளாகத்திற்கு சென்றடைந்தது.  


முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் உறுதிமொழியான ”எனது தாய் நாடாகிய தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்க நான் உறுதுணையாக இருப்பேன். கருவில் வளரும் சிசுவின் பாலினத்தை எக்காரணம் கொண்டும் கண்டறியவோ, கருக்கொலை செய்யவோ முயல மாட்டேன். நானும் எனது உறவினர்களும் எனது கிராமத்தில் பெண் குழந்தைகள் பிறப்பிற்கும் அவர்களின் பாதுகாப்பிற்கும், கல்விக்கும், கண்டிப்பாக எவ்வித பாகுபாடின்றி சமமான மதிப்பு அளித்து உதவி செய்வோம். மேலும், குழந்தை திருமணத்தை தடுப்போம். எளிமையான திருமணங்களுக்கு ஆதரவு அளிப்போம். பெண் குழந்தைகளின் பெருமையை போற்றி எதிர்காலத்தில் பெண்குலம் தழைக்க செய்வோம் என்றும், உளமார உறுதி அளிக்கிறேன்”  என்ற உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும், பணியாளர்கள் மாணவ, மாணவியர்கள் ஏற்றுக்கொண்டனர்.


இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் சண்முக வடிவு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பூங்கோதை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் உமா மகேஸ்வரி, அரசு அலுவலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.








 



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.