ஈரோடு மாவட்டம், கூகலுார், வெள்ளாளபாளையம், லக்கம்பட்டி, பொலவக்காளிபாளைம், ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் இன்று (06.01.2026) குடும்ப அட்டைதார்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெற வீடு வீடாக டோக்கன்கள் வழங்கப்பட்டு வரும் பணியினை ஆய்வு மேற்கொண்டார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 2026-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு, மற்றும் ரூ.3,000 ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள்.
ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் கூட்டுறவுத்துறையின் மூலம் 913 முழுநேரம் மற்றும் 340 பகுதி நேரம் நியாயவிலைக்கடைகள் என மொத்தம் 1,253 நியாய விலைக்கடைகள் மூலமாகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் மூலமாகவும், 14 முழுநேரம் மற்றும் 1 பகுதி நேரம் கடையின் மூலமாகவும், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக நடத்தப்படும் 2 நியாயவிலைக்கடைகள் மூலமாகவும் என மொத்தம் 1,270 கடைகள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் 7,46,528 இலட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால், குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3,000 ரொக்கம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழுக் கரும்பு உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை 08.01.2026 அன்று சென்னையில் தொடங்கி வைக்க உள்ளார்கள்.
பொங்கலுக்கு முன்னதாகவே அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ரொக்கப்பரிசு, பொங்கல் பரிசு தொகுப்பு, வேட்டி சேலைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை பெற பொதுமக்கள் ஒரே நேரத்தில் நியாயவிலைக்கடைகளுக்கு வரும்போது நெரிசலை தவிர்க்கும் வகையில் நியாயவிலைக்கடை ஊழியர்கள் மூலமாக நாள் மற்றும் நேரம் குறித்த டோக்கன்கள் கொடுத்து குடும்ப அட்டைதார்கள் நியாயவிலைக்கடைக்கு வந்து பொங்கல் பரிசு தொகுப்பு பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி டோக்கன் விநியோக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழர் திருநாளாம் தைத்திருநாள் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு வழங்கப்படுவதையொட்டி விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் பணியினை நடைபெற்று வருவதை இன்றைய தினம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கோபிசெட்டிபாளையம், கூகலுார் பகுதியில் கரும்பு பயிரிடப்பட்டுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு, கரும்பின் சுவை, உயரம், தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, பொலவக்காளிபாளையம் மற்றும் வெள்ளாளபாளையம் பகுதியில் குடும்ப அட்டைதார்களுக்கு நியாயவிலைக்கடைகள் விற்பனையாளர்கள் மூலம் வீடு வீடாக பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன்கள் வழங்கப்படுவதை பார்வையிட்டு தேதி, நேரம், இருப்பதை ஆய்வு செய்தார்.
மேலும், கோபிசெட்டிபாளையம், லக்கம்பட்டி, கரட்டடிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாயவிலைக்கடைகளில் பொங்கலுக்கு கொள்முதல் செய்யப்பட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படவுள்ள கரும்பு, பச்சரிசி, சர்க்கரை, ஆகியவற்றின் தரம் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ப.கந்தராஜா, உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1).jpg)
%20(1).jpeg)
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)