தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ், கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப்பொருட்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்பேரில் காவல்துறை, உணவு பாதுகாப்புத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பள்ளி, கல்லூரி அருகாமையில் உள்ள கடைகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டு இத்தடையினை மீறி விற்பனையில் ஈடுபடும் கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடி வைக்கப்படுகிறது.
ஈரோடு மாவட்டத்தில் ஜனவரி-2025 முதல் டிசம்பர்-2025 வரை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த 943 கடைகள் மூடி வைக்கப்பட்டு ரூ.2,57,25,000/- (இரண்டு கோடியே ஐம்பத்து ஏழு லட்சத்து இருபத்து ஐந்தாயிரம்) அபராதம் விதிக்கப்பட்டு அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் 4,783 கிலோ புகையிலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மாவட்ட அளவிலான அழிப்புக்குழு முன்னிலையில் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் அழிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்றம் சாலை சத்தியமங்கலத்தில் உள்ள ஹனிபா பெட்டிக் கடையில் தமிழக அரசின் தடையை மீறி நான்காவது முறை புகையிலைப்பொருட்கள் விற்பனை செய்த குற்றத்திற்கு ஈரோடு மாவட்ட நியமன அலுவலர் தலைமையில் மாநகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழுவினரால் ஆய்வு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் 1.25 கிலோ பறிமுதல் செய்து, வணிகத்தை தடை செய்ய நியமன அலுவலரால் ஆணை பிறப்பிக்கப்பட்டது. மேலும் உள்ளாட்சித் துறையினரால் வழங்கப்பட்ட தொழில் உரிமம் ரத்து செய்யப்பட்டது. 4-ம் முறை குற்றத்திற்காக கடை உரிமையாளர் மீது மாவட்ட தீர்ப்பு வழங்கும் அலுவலக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஏற்கனவே ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடர் குற்றத்திற்கு ரூ.1.9 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆய்வின்போது சுகாதாரத்துறை அலுவலர், மாநகராட்சி ஆய்வாளர் மற்றும் காவல்துறையினர் உடனிருந்தனர். காவல்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை, கல்வித்துறை ஆகிய துறையினருடன் ஒருங்கிணைந்து கடைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு அருகாமையில் உள்ள உணவு வணிக நிறுவனங்களில், தீவிரமாக சோதனைகளில் ஈடுபட்டு வருவதுடன் வாகனங்களில் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பொதுமக்கள் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் நிகோட்டின் கலந்த உணவுப்பொருட்களை விற்பனை செய்வது குறித்து புகார்களை 0424 2223545 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். அவ்வாறு புகார் அளிக்கும் நுகர்வோர்களின் விபரம் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
.jpg)