ஈரோடு மாவட்டத்தில் சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியான அமைப்புசாரா தொழிலாளர்கள், மத்திய அரசின் Pradhan Mantri Shram Yogi Maandhan (PM-SYM) ஓய்வூதியத் திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.
18 முதல் 40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்த பங்களிப்பு அடிப்படையிலான திட்டத்தில், பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தினால், மத்திய அரசும் அதே அளவு பங்களிப்பை வழங்கும். இதன் மூலம், 60 வயதை அடைந்த பின்னர் மாதந்தோறும் ரூ.3,000 உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி உள்ளது.
சுற்றுலா வழிகாட்டிகள், சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், போக்குவரத்து சேவை வழங்குநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல் துறை பணியாளர்கள், House Keeping Staffs, கைவினைக் கலைஞர்கள், தெருவோர வியாபாரிகள், கைவினைப் பொருள் உற்பத்தியாளர்கள், உணவகம் மற்றும் உணவுச் சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய பல்வேறு தொழிலாளர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியுடைய தொழிலாளர்கள் ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் (Passbook) மற்றும் கைப்பேசி எண்ணுடன் அருகிலுள்ள Common Service Centre (CSC)-ஐ அணுகி பதிவு செய்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாத் துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும் இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, தகுதியான தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் மாவட்ட ஆட்சித்தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
.jpeg)