Type Here to Get Search Results !

மாவட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வு , நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் தலைமையில் கூட்டம்......


ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம், குழுத் தலைவர் மற்றும் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர்
கே.இ.பிரகாஷ் தலைமையில் நடைபெற்றது.


மத்திய அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைவதையும், திட்ட நிதிகள் முறையாக பயன்படுத்தப்படுவதையும் உறுதி செய்து, பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில் இக்கூட்டம் நடைபெற்றது.


கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் செயல்படுத்தப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 1,83,819 குடும்பங்களில் 43,942 குடும்பங்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், சிமெண்ட் கான்கிரீட் தளம் அமைத்தல், புதிய குளங்கள் அமைத்தல், குளங்கள் தூர்வாருதல், பள்ளி சுற்றுச்சுவர் அமைத்தல், மரக்கன்றுகள் நடுதல், சாலைப் பணிகள், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சிகள் தொடர்பான பணிகளும் ஆய்வு செய்யப்பட்டன.


இதனைத் தொடர்ந்து பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம், பிரதம மந்திரி ஆதர்ஸ் கிராம் யோஜனா, பிரதம மந்திரி கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், Jal Jeevan Mission, சீர்மிகு நகர திட்டம், தூய்மை பாரத இயக்கம், AMRUT 2.0 உள்ளிட்ட திட்டங்களின் முன்னேற்றம் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.


மேலும், பவானி, கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம் மற்றும் புஞ்செய்புளியம்பட்டி நகராட்சிகளில் நடைபெற்று வரும் குடிநீர், சுத்திகரிப்பு நிலையம், திடக்கழிவு மேலாண்மை, நகர்ப்புற மேம்பாடு, சாலை மேம்பாடு உள்ளிட்ட பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


அதேபோல், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், பேரூராட்சிகள் நிர்வாகம், சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பள்ளிக்கல்வித்துறை, மின்சார வாரியம், தோட்டக்கலை மற்றும் மழைப் பயிர்கள் துறை, வேளாண்மைத் துறை, சுகாதாரத்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து துறை வாரியாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 23.02.2026 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றமும் ஆய்வு செய்யப்பட்டு, அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.