ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி மற்றும் சிறப்பு குறைதீர் முகாம் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பேசியபோது, மாணவர்களின் கல்வி மற்றும் உயர்கல்வி தொடர்பான எந்தவொரு பிரச்சினையும் அவர்களின் எதிர்காலத்திற்கு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து இந்த சிறப்பு குறைதீர் முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.
கல்வி என்பது வேலைவாய்ப்பைப் பெறுவதற்காக மட்டுமல்ல, ஒரு மனிதனை முழுமையான மனிதனாக உருவாக்குவதற்கான அடிப்படை என்றும், மாணவர்கள் சிறந்த கல்வியுடன் நல்ல பண்புகள், சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். மேலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் அறிஞர்களின் தியாக உணர்வையும் சமூகப் பொறுப்பையும் மாணவர்கள் முன்மாதிரியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
மாணவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள், அரசு வேலைவாய்ப்புத் தேர்வுகளுக்கான இலவச பயிற்சிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர்நிலைத் தேர்வுகளுக்கான பயிற்சி, தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் வங்கி கடன் வசதிகள் உள்ளிட்ட அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார்.
இச்சிறப்பு குறைதீர் முகாமில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடமிருந்து உயர்கல்வி சேர்க்கை, கல்விக் கடன், கல்வி உதவித்தொகை, சமூக, வருமானம் மற்றும் இருப்பிடச் சான்றிதழ்கள், முதல் பட்டதாரி சலுகை, மாணவர் விடுதி வசதி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவிகள், அரசு மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு வழிகாட்டுதல், போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி, மாணவர் பேருந்து சலுகை, ஆதார் மற்றும் வங்கி கணக்கு தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட மொத்தம் 35 மனுக்கள் பெறப்பட்டன.
மாணவர்கள் அளித்த கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பெற்று, உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் இ.மான்விழி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலமெடுப்பு) முரளி, மாவட்ட சமூக நீதி துறை அலுவலர் சுடலைமணி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
.jpeg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)