Type Here to Get Search Results !

தாளவாடியில் பல்வேறு அரசு சேவைகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர்.....


"உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, தாளவாடி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை இரண்டாவது நாளாக நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, முதல் நாள் ஆய்வில் தாளவாடி துணை வேளாண்மை விரிவாக்க மையம், கிராம நிர்வாக அலுவலகம், நூலகம், பேருந்து நிலையம், கால்நடை மருந்தகம், சத்துணவு கூட சமையலறை கட்டிடம், e-சேவை மையம் மற்றும் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். மேலும், அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வு நடத்தி, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.




இரண்டாவது நாளான இன்று, தாளவாடி ஒன்றியம் அரேப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் சத்துணவு கூடத்தில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். தொடர்ந்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் வகைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் தாளவாடி சமூக நீதி (பள்ளி மாணவர்) விடுதியில் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் கல்வி முன்னேற்றம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.



ஓங்கல்வாடி பகுதியில், தூய்மைப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணிகளையும், கழிவு சேகரிப்பு வாகனத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்பகுதி பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்டறிந்து, அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அரேப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் செயல்பாடு மற்றும் குடிநீர் விநியோக நிலையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், அங்கு செயல்பட்டு வரும் ஈரோடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் செயல்பாடுகளையும் பார்வையிட்டார். மேலும், பொதுக் கழிவறையின் தூய்மை, பராமரிப்பு மற்றும் பயன்பாட்டு நிலை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.


தொடர்ந்து, ஆசனூர் ஊராட்சி சென்டர் தொட்டி பகுதியில் இயங்கி வரும் மண்புழு உரக் கொட்டகையை பார்வையிட்டு, மண்புழு உர உற்பத்தி, பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், உற்பத்தி அளவு மற்றும் உரத்தின் தரம் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) உமாசங்கர், வருவாய் வட்டாட்சியர் மாரிமுத்து, தாளவாடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாதவன், மஞ்சுநாதன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.