Type Here to Get Search Results !

கொடுமுடியில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் -138 பயனாளிகளுக்கு ரூ.85.62 லட்சம் நலத்திட்ட உதவிகள்...


ஈரோடு மாவட்டம், கொடுமுடி வட்டம், கொடுமுடி உள்வட்டம், இச்சிப்பாளையம் “ஆ” கிராம நிர்வாக அலுவலகம் அருகில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்டம் முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி  அவர்கள் 138 பயனாளிகளுக்கு ரூ.85.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 12.08.2026 அன்று வழங்கினார்.
  


  

முகாமில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், ஈரோடு மாவட்டத்தில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மாதந்தோறும் மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்டம் முகாம் நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு தீர்வு காண்பதே இம்முகாமின் முக்கிய நோக்கம் என்றும் தெரிவித்தார்.




வருவாய்த்துறையின் சார்பில் 57 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவும், 14 பயனாளிகளுக்கு அரசு ஆவணங்களில் பெயர் மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. நில அளவைப் பிரிவு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, சமூக பாதுகாப்புத் திட்டம், வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மொத்தம் 128 பயனாளிகளுக்கு ரூ.70.83 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.




மேலும், 2 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், 2 பயனாளிகளுக்கு காசநோய் ஊட்டச்சத்து மாவு, செண்பகம் மகளிர் சுய உதவிக்குழுவிற்கு ரூ.6 லட்சம் குழுக் கடனுதவி மற்றும் 5 விவசாயிகளுக்கு ரூ.8,79,365 மதிப்பிலான பயிர்க்கடன் உதவி வழங்கப்பட்டது.




இதனடிப்படையில், மொத்தம் 138 பயனாளிகளுக்கு ரூ.85.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். முன்னதாக, பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும் பார்வையிட்டார்.



இம்முகாமில் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.