ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோமராபாளையம், சதுமுகை, பழையகலைநாயனூர் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் 13.08.2026 நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு ஆகியவற்றை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தொடர்ந்து, சத்தியமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தை பார்வையிட்டு, பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பல்வேறு அரசு சேவைகள், விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலிக்கப்படும் நடைமுறைகள் மற்றும் இணையதள சேவைகள் குறித்து ஆய்வு செய்தார். பள்ளியில் செயல்பட்டு வரும் சமையலறையையும் பார்வையிட்டு, மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தார்.
கோமராபாளையம் ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மண்புழு உரக்கொட்டகையை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், மண்புழு உர உற்பத்தி, மூலப்பொருட்களின் பயன்பாடு மற்றும் உரத்தின் தரம் குறித்து கேட்டறிந்தார். மேலும், கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு சேகரித்து வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார்.
சத்தியமங்கலம் வட்டம் ஆலத்துகோம்பை கிராமத்தில் பிரதான் மந்திரி கிருஷி சஞ்சாயி யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.1.97 லட்சம் மானியத்தில் நிலத்தடி நுண்ணீர் பாசன முறையில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணீர் பாசன பணியையும் பார்வையிட்டு, பயனாளியிடம் திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.
புதுமுகை பகுதியில் வி.பி.ஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பண்ணையையும் பார்வையிட்டு, மரக்கன்றுகளின் வகைகள் மற்றும் உற்பத்தி செய்யப்படும் முறை குறித்து கேட்டறிந்தார்.
சதுமுகை ஊராட்சியில் மகளிர் சுயஉதவிக்குழு மூலம் நடத்தப்பட்டு வரும் சத்துமாவு மற்றும் சிறுதானிய உணவு வகைகள் தயாரிக்கும் கூடத்தையும் பார்வையிட்டு, மாவு தயாரிக்கும் முறை, உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் அவற்றின் விற்பனை குறித்து கேட்டறிந்தார். மேலும், நியாயவிலைக்கடையில் அத்தியாவசியப் பொருட்களின் இருப்பு விவரம், குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை மற்றும் பயோமெட்ரிக் முறையையும் ஆய்வு செய்தார்.
பழையகலையனூர் கிராமத்தில் விதை பெருக்கு திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நிலக்கடலை விதைப் பண்ணைத் திடலை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், நிலக்கடலை சாகுபடியின் தற்போதைய நிலை, பயிர் வளர்ச்சி, நீர்ப்பாசன வசதிகள், உற்பத்தித்திறன் மற்றும் அரசு திட்டங்களின் பயன் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சாகுபடி பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ரமேஷ் கிருஷ்ணன், சத்தியமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் அர்த்தநாரீஸ்வரர், உதவி பொறியாளர்கள் வரதன், முருகேசன், வேளாண்மை அலுவலர் மிதுன், துணை வேளாண்மை அலுவலர் வீர்தினேஷ்கர், உதவி விதை அலுவலர் மதன் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.
%20(2)%20(1).jpg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)