ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சந்திபுரம், பொலவக்காளிப்பாளையம், குள்ளம்பாளையம், கிருஷ்ணா நகர், கரட்டூர், கலிங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் 07.08.2026 இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கோபிசெட்டிபாளையம் சந்திரபுரம் பகுதியில் மயிலங்கரை சாலை முதல் காளியம்மன் கோவில் வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், சாலையின் தரம், நீளம், அகலம், தடிமன், சாலை அமைக்க பயன்படுத்தப்பட்ட கற்களின் அளவு மற்றும் மூலப்பொருட்களின் தரம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
பொலவக்காளிப்பாளையம் ஊராட்சியில் வி.பி.ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.9.92 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நாற்றுப்பண்ணையினை பார்வையிட்டு, வளர்க்கப்பட்டு வரும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை, வகைகள் மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். மேலும், வெள்ளாளபாளையம் பள்ளி முதல் பொலவக்காளிப்பாளையம் கிராம சாலை வரையிலான சாலையோரங்களில் ரூ.1.13 இலட்சம் மதிப்பீட்டில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதையும் பார்வையிட்டு, அவற்றை முறையாக பராமரித்து தொடர்ந்து வளர்ச்சியடைய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
குள்ளம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூ.9.87 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையலறையுடன் கூடிய இருப்பறைக் கட்டிடத்தை ஆய்வு செய்தார். மேலும், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிய உணவு, உணவின் தரம், சுகாதாரம் மற்றும் மாணவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, குள்ளம்பாளையத்தில் செயல்பட்டு வரும் இயற்கை உரம் தயாரிக்கும் மையத்தை பார்வையிட்டு, இயற்கை உரம் தயாரிக்கும் முறைகள், மையத்தின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்பகுதியில் அமைந்துள்ள வண்ணாங்குட்டை ஏரியையும் பார்வையிட்டு, ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகளை சிறப்பு கவனம் செலுத்தி சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
குள்ளம்பாளையத்தில் செயல்பட்டு வரும் நூலகத்தையும் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், அரசு போட்டித்தேர்வுகளுக்கான நூல்கள், பிற நூல்கள், தினசரி வருகை தரும் வாசகர்கள் மற்றும் அரசு தேர்வுகளுக்கு பயில்பவர்கள் விபரம், குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கோபிசெட்டிபாளையம் நகராட்சி அம்மா உணவக சமையல் கூடத்தை பார்வையிட்டு, பணியாளர்கள் விபரம், தினசரி உணவகத்திற்கு வருகை தரும் பொதுமக்களின் விபரம், தினசரி உணவு பட்டியல், உணவு விற்பனை விலை மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மேலும், உணவகத்தில் உணவு உண்ண வந்த பொதுமக்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்து கலந்துரையாடினார்.
கிருஷ்ணா நகர் பகுதியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திட்டத்தின் கீழ் ரூ.19.65 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் புதுப்பிக்கும் பணிகளையும், ரூ.35.35 இலட்சம் மதிப்பீட்டில் நுழைவு வளைவு, பெயர்ப்பலகை, சுற்றுச்சுவர், விளையாட்டு மைதானம், குடிநீர் வசதி, கணினிகள், தளவாடங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, கோபிசெட்டிபாளையம் நகராட்சி ரூ.9.96 கோடி மதிப்பீட்டில் கரட்டூர் உரக்கிடங்கில் கெடு கழிவு சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும், கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் ரூ.2.64 கோடி மதிப்பீட்டில் தினசரி மலர் சந்தை கட்டுமானப் பணிகளையும் பார்வையிட்டு, பணிகளின் முன்னேற்றம், கட்டுமானப் பொருட்களின் தரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய இதர பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
கலிங்கியம் பகுதியில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் சார்பில் ரூ.2.40 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர காய்கறி பந்தல் சாகுபடியினை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், சாகுபடியின் தற்போதைய நிலை, பயிர் வளர்ச்சி, நீர்ப்பாசன வசதிகள், உற்பத்தித்திறன் மற்றும் அரசு திட்டங்களின் பயன் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தார். மேலும், சாகுபடி பணிகளை சிறப்பாக மேற்கொள்ள தேவையான ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.
இந்த ஆய்வுகளின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராதாமணி, ஆனந்தன், உதவி செயற்பொறியாளர் அக்ஷயகுமார் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடன் இருந்தனர்.

%20(1).jpeg)
%20(1).jpeg)
.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)
%20(1).jpeg)
.jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)
%20(1).jpeg)