ஈரோடு புத்தகத் திருவிழா வெற்றிகரமாக நிறைவு – மாவட்ட ஆட்சியர் தகவல்
ஈரோடு மாவட்டம், வீரப்பன்சத்திரம் சிக்கய்ய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தி வரும் 22-வது ஈரோடு புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் புத்தக வாசிப்பை பெருமளவில் கொண்டு செல்லும் நோக்கில் இந்த ஆண்டு பல்வேறு சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் ஒரு பகுதியாக, 519 இடங்களில் 2.06 லட்சம் பேர் ஒரே நேரத்தில் 22 நிமிடங்கள் புத்தகம் வாசித்த நிகழ்வு, Elite Book of Records நிறுவனத்தின் மூலம் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
புத்தகத் திருவிழாவின் 12 நாட்களிலும் தினமும் சிறப்பு சிந்தனை அரங்குகள் நடத்தப்பட்டன. எழுத்தாளர்கள், அறிஞர்கள், அறிவியலாளர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஆளுமைகள் இதில் பங்கேற்றனர். மேலும், சுமார் 80 புதிய புத்தகங்கள் வெளியிடப்பட்டதுடன், புத்தகத் திருவிழாவிற்காகவே 500-க்கும் மேற்பட்ட புதிய புத்தகங்கள் பதிப்பாளர்களால் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் புத்தகத் திருவிழாவிற்கு வருகை தந்து, புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி வருகின்றனர். இது மாணவர்களிடையே வாசிப்பு பழக்கம் வளர்ந்து வருவதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
மக்கள் சிந்தனைப் பேரவை, பல்வேறு அமைப்புகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்ட “புத்தக அலமாரி திட்டம்” மூலம் சுமார் 60 பள்ளிகளுக்கு தலா ரூ.15,000 மதிப்பிலான புத்தக அலமாரி மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சிங்கப்பூரிலிருந்து 25-க்கும் மேற்பட்ட சிறப்பு விருந்தினர்கள் ஈரோட்டிற்கு வருகை தந்து புத்தகத் திருவிழாவை பார்வையிட்டு, பொதுமக்களின் வாசிப்பு ஆர்வத்தை பாராட்டினர். தினந்தோறும் கதை அரங்கம், பேச்சரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவு, சிந்தனை மற்றும் வாசிப்பு பழக்கத்தை வளர்க்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.
புத்தகத் திருவிழாவின் வெற்றிக்கு நூற்றுக்கணக்கான கல்லூரி மாணவர்கள் தன்னார்வலர்களாக இணைந்து சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தி, உயர்ந்த சிந்தனை மற்றும் நல்லெண்ணத்தை வளர்க்கும் முக்கிய சமூகப் பணியாக ஈரோடு புத்தகத் திருவிழா அமைந்துள்ளது. வாசிப்பு, அறிவு, சிந்தனை மற்றும் நல்லெண்ணம் போன்ற நேர்மையான செயல்பாடுகளை முன்னெடுப்பதன் மூலம் நல்ல சமூகத்தை உருவாக்க முடியும். அந்த வகையில் ஈரோடு புத்தகத் திருவிழா மிகச் சிறப்பான வெற்றியைப் பெற்றுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா சங்கர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(1)%20(1).jpg)