Type Here to Get Search Results !

போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு....

 


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னையில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்கும் பொருட்டு போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 11.08.2026 இன்று  மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் முன்னிலையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற உறுதிமொழி நிகழ்ச்சியில்,முதலமைச்சர் அவர்கள் வாசித்த உறுதிமொழியைத் தொடர்ந்து மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள்  பின் வாசித்து ஏற்றுக்கொண்டனர்.


தொடர்ந்து, “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” உருவாக்குவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, தெருக்கூத்து, குறும்படம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். மேலும், போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான நாடகம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திய மாணவர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.


குழந்தைகள் இல்லங்களில் போதைப்பொருள் தடுப்பு தொடர்பாக நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, முழக்கப்போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேலும், பள்ளி மற்றும் கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்பு மன்றங்கள் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக மாநில அளவில் முதலிடம் பெற்ற ஈரோடு கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் ஈரோடு செங்கோடம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சேர்ந்த திரு.கேப்டன் ஏ.ஆர்.கார்த்திகேயன் மற்றும் உதவி தலைமையாசிரியை திருமதி.யமுனா தேவி ஆகியோருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் புத்தகங்கள் வழங்கி கௌரவித்தார்.



இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வி.கிரண் ஸ்ருதி ஈரோடு மாநகராட்சி ஆணையர் அர்பித் ஜெயின்,  உதவி ஆணையர் (கலால்) கோகிலா, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.அருணா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கல்லூரி முதல்வர், மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.