ஈரோடு மாவட்டம் வாய்க்கால்மேடு நந்தா பொறியியல் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் 24.08.2026 இன்று தொடங்கி வைத்தார்.
ஈரோடு மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆண்டுதோறும் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, இக்கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக “இளையோர் திறன்” என்ற மையக்கருத்தின் அடிப்படையில் போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு தனித்தனியாக பள்ளி, குறுவளமையம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடைபெற உள்ளன. மாவட்ட அளவிலான போட்டிகளில் மாணவர்களின் படைப்பாற்றல், தனித்திறன், கலை ஆர்வம் மற்றும் பாரம்பரியக் கலைகளை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கலைப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் 24.08.2026 மற்றும் 25.08.2026 ஆகிய இரு நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகின்றன. 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்காக 32 போட்டித் தலைப்புகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இன்று நடைபெற்ற 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 623 மாணவர்களும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 254 மாணவர்களும் பங்கேற்றனர். நாளை நடைபெற உள்ள 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டிகளில் அரசு பள்ளிகளைச் சேர்ந்த 572 மாணவர்களும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த 128 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
மாவட்ட அளவிலான போட்டிகளில் சிறப்பாகப் பங்கேற்று வெற்றி பெறும் மாணவ, மாணவியர்களுக்கு பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்படுவதுடன், அவர்களின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்ளவும், மாநில அளவிலான கலைத்திருவிழா போட்டிகளில் பங்கேற்கவும் வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் லக்காபுரம் சிறப்பு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர்களின் பரதநாட்டியம், குமலாங்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வன்.நிதின் அவர்களின் வாய்ப்பாட்டு, அம்மாப்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவியர்களின் வில்லுப்பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் முதன்மை கல்வி அலுவலர் முனைவர் இ.மான்விழி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்களான பரமசிவம், செல்வம், மாவட்ட தனியார் பள்ளி கல்வி அலுவலரான இரா.கேசவக்குமார், உதவி திட்ட அலுவலர் பரமசிவம், நந்தா பொறியியல் கல்லூரி முதல்வர்கள் நந்தகோபால், ரகுபதி, மோகன் குமார், ஆசிரியர்கள், பள்ளி மாணவ - மாணவியர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
%20(3)%20(1).jpg)
.jpeg)
.jpg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)