ஈரோடு மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை மற்றும் பருவகால மாற்றங்களால் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதையடுத்து, டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் சுத்தமான நீரில் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. டயர், பயன்படுத்தாத உடைந்த சிமெண்ட் தொட்டிகள், பூந்தொட்டிகள், நீண்ட காலமாக கழுவப்படாத மணிபிளாண்ட் தொட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்டவற்றில் தேங்கும் நீரில் ஏடிஸ் கொசுக்கள் உருவாகின்றன. இக்கொசுக்கள் பகலில் கடிக்கும் தன்மை கொண்டவை.
எனவே, ஏடிஸ் கொசு உருவாகும் தேவையற்ற பொருட்களை அகற்றுவதுடன், தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை வாரம் ஒருமுறை நன்றாகத் தேய்த்து கழுவி, நீர் பிடித்த பின்னர் காற்று புகாதவாறு மூடி வைக்க வேண்டும்.
டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக காய்ச்சல், சோர்வு, தலைவலி, உடல் வலி, வாந்தி மற்றும் எலும்பு வலி ஆகியவை காணப்படலாம். காய்ச்சல் ஏற்பட்டால் உரிய மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சிகிச்சையை தாமதப்படுத்துவது, சுயமாக மருந்துகளை உட்கொள்வது அல்லது போலி மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது உடல்நலத்தில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை உரிய நேரத்தில் உட்கொள்ள வேண்டும்.
டெங்கு பரவலைத் தடுப்பது தொடர்பாக பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு ஆய்வுக்கூட்டங்கள் நடத்தப்பட்டு, மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஒவ்வொரு திங்கட்கிழமையும் உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, நீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித் துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் கொசு நோய் தடுப்பு ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு டெங்கு மற்றும் இதர காய்ச்சல்களுக்கு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வீடுகளுக்கு பணியாற்ற வரும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி, கேட்டுக்கொண்டுள்ளார்.
%20(1)%20(1).jpg)