Type Here to Get Search Results !

கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார விழிப்புணர்வு முகாம் இன்று தொடக்கம்...


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம், பெரியூர் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடைபெற்ற கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாமை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மாண்புமிகு கால்நடை துறை அமைச்சர் செ.கமலி ஆகியோர் 22.8.2026 இன்று  தொடங்கி வைத்தனர். முகாமுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி  தலைமை வகித்தார். பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி.தமிழ்ச்செல்வி முன்னிலை வகித்தார்.




2026-27ஆம் ஆண்டில் ஈரோடு மாவட்டத்தின் அனைத்து கிராமங்களிலும் கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் “சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்கள்” நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 2026 முதல் ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 18 முகாம்கள் வீதம், 14 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 252 முகாம்கள் நடத்தப்பட உள்ளன.



இம்முகாம்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை, குடற்புழு நீக்கம், நோய்களுக்கு எதிரான தடுப்பூசி, ஆண்மை நீக்கம், மலட்டுத்தன்மை நீக்க சிகிச்சை, செயற்கை முறை கருவூட்டல், சினை பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு கால்நடை மருத்துவ சேவைகள் வழங்கப்படுகின்றன. தேவையான சிறு அறுவை சிகிச்சைகள், நோய் தடுப்பு மற்றும் நோய் தீர்க்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. கோழிகளுக்கும் தேவையான சிகிச்சைகள் இலவசமாக மருத்துவக்குழு மூலம் வழங்கப்படுகின்றன.



முகாமில் 3 பயனாளிகளுக்கு சிறந்த கால்நடை மேலாண்மை பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், 5 பயனாளிகளுக்கு சிறந்த தீவன மரக்கன்றுகள், 3 பயனாளிகளுக்கு சிறந்த கிடாரி கன்று வளர்ப்பு நலத்திட்ட உதவிகள் மற்றும் 16 பயனாளிகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.



கால்நடைகளை முறையாக பராமரித்தல், தேவையான ஊட்டச்சத்து வழங்குதல், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தல், பால் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் கால்நடை வளர்ப்பின் மூலம் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குதல் குறித்து கால்நடை வளர்ப்போருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குடற்புழு பாதிப்பு, கால்சியம் குறைபாடு உள்ளிட்ட பிரச்சினைகளை உரிய நேரத்தில் கண்டறிந்து, கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிகிச்சை மற்றும் ஊட்டச்சத்து வழங்குவதன் அவசியமும் எடுத்துரைக்கப்பட்டது.

       


மேலும், ஈரோடு மாவட்டத்தின் பாரம்பரிய கால்நடை இனமான காங்கேயம் கால்நடைகளை பாதுகாத்து, அவற்றின் இனப்பெருக்கத்தை மேம்படுத்தி, கால்நடை வளர்ப்பை நிலையான வாழ்வாதாரமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.



முன்னதாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கருத்து காட்சி அரங்குகளை அமைச்சர்கள் திறந்து வைத்து பார்வையிட்டனர். தொடர்ந்து, கால்நடைகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகளை வழங்கி, கால்நடைகளுக்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறைகளையும் பார்வையிட்டனர்.


இந்நிகழ்வில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மரு.மு.முருகன், கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, உதவி இயக்குநர்கள் மரு.பா.சாரதா பாபி, சக்திவேல், கண்ணன், செல்வராஜ், கால்நடை உதவி மருத்துவர்கள் மரு.வளர்மதி, மரு.முருகானந்தம் உள்ளிட்ட துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.