Type Here to Get Search Results !

மஞ்சள் சாகுபடிக்கான சான்றிதழ் முறை குறித்த கருத்தரங்கம்....


ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடிக்கான பங்கேற்பு உத்தரவாத சான்றிதழ் முறை (PGS) குறித்த கருத்தரங்கத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி  27.08.2026 இன்று தொடங்கி வைத்தார்.


ஈரோடு Turmeric Hotel கூட்டரங்கில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர், ஈரோடு மாவட்டத்தின் முக்கிய வேளாண் பயிர்களில் மஞ்சள் முக்கிய இடம் வகிப்பதாக தெரிவித்தார். மாவட்டத்தில் சுமார் 11,860 ஏக்கர் பரப்பளவில் மஞ்சள் சாகுபடி செய்யப்பட்டு வருவதாகவும், இது தமிழ்நாட்டின் மொத்த மஞ்சள் உற்பத்தியில் சுமார் 30 சதவீதம் என்றும் கூறினார்.


BSR-2 மற்றும் ஈரோடு உள்ளூர் ஆகிய மஞ்சள் வகைகள் புவிசார் குறியீடு பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தைகளில் அங்கக மஞ்சளுக்கான தேவை அதிகரித்து வருவதால், அங்ககச் சான்றிதழ் பெறுவதன் மூலம் விவசாயிகள் கூடுதல் சந்தை வாய்ப்பையும், அதிக விலையையும் பெற முடியும் என்றார்.


PGS முறையில் 5 முதல் 20 விவசாயிகள் குழுவாக இணைந்து, பரஸ்பர ஆய்வு மற்றும் கண்காணிப்பு மூலம் குறைந்த செலவில் அங்ககச் சான்றிதழ் பெற முடியும். ஒரு விவசாயிக்கு சுமார் ரூ.500 மட்டுமே செலவாகும் என்பதால், சிறு மற்றும் குறு விவசாயிகள் இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.


அங்ககச் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் நறுமணப் பொருட்கள் வாரியம் மூலம் சாகுபடி செலவில் 12.5 சதவீதம், அதிகபட்சமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,500 வரையும், அங்ககச் சான்றிதழ் செலவில் 50 சதவீதம் வரையும் உதவி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், மஞ்சள் வேகவைக்கும் மற்றும் பதப்படுத்தும் இயந்திரங்களைப் பெற விவசாயிகள் மற்றும் விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு 50 சதவீத மானியம், அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை உதவி கிடைப்பதாகவும் கூறப்பட்டது.


விவசாயிகள் விளைபொருட்களை உற்பத்தி செய்வதுடன் நின்றுவிடாமல், அவற்றை மதிப்புக்கூட்டி உரிய முறையில் சந்தைப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என ஆட்சித்தலைவர் வலியுறுத்தினார். ஈரோடு மாவட்டத்தில் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஒருங்கிணைத்து, அவர்களின் விளைபொருட்களுக்கு சிறந்த சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த அமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் கருத்துக்காட்சி அரங்குகளை பார்வையிட்டார்.

இப்பயிற்சியில் வேளாண்மை இணை இயக்குநர் இரா.சிவக்குமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சி.லோகநாதன், ஈரோடு துல்லிய பண்ணை நிறுவனர் முனைவர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களின் இயக்குநர்கள், குழு உறுப்பினர்கள் மற்றும் முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.