Type Here to Get Search Results !

திருமண மண்டபங்கள், நட்சத்திர ஹோட்டல் அரங்குகளில் வணிக நோக்கிலான Seasonal Sales-க்கு முற்றிலும் தடை......


ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் அரங்குகளில் திருமண நிகழ்ச்சிகள், விழாக்கள் மற்றும் கூட்டங்கள் உள்ளிட்ட அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளை மட்டுமே நடத்த வேண்டும். வணிக நோக்கிலான ஆடை விற்பனை நிகழ்ச்சிகள் (Seasonal Sales) நடத்துவதற்கு முற்றிலும் அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புரைகளின் அடிப்படையில், திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் அரங்குகளில் ஆடை விற்பனைகள், உணவுத்திருவிழாக்கள், விழாக்கால விற்பனை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வணிக கண்காட்சி, விளையாடுமிடம், பொருட்காட்சி போன்ற நிகழ்ச்சிகளை உரிய அனுமதியின்றி நடத்தக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The Tamilnadu Public Building (Licensing) Act, 1965-ன்படி, கட்டிட உரிமம் எந்த பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டதோ, அந்த பயன்பாட்டிற்காக மட்டுமே கட்டிடம் பயன்படுத்தப்பட வேண்டும். விதிகளை மீறி அனுமதியின்றி நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மீது The Tamilnadu Public Building (Licensing) Act, 1965 Section-10(1)-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் ஏற்கனவே தெரிவித்துள்ளார்.

திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் அரங்குகளில் தொடர்ந்து அனுமதியின்றி விழாக்கால விற்பனை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், விற்பனையாளர்களால் உரிய GST பதிவு மற்றும் வரி செலுத்துதல் தொடர்பான நடைமுறைகள் பின்பற்றப்படாமல் அரசுக்கும், உள்ளூர் வணிகர்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தடுக்க ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, இனிவரும் காலங்களில் திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் அரங்குகளில் ஆடை விற்பனை கண்காட்சிக்கு முற்றிலும் அனுமதி இல்லை. மாவட்ட ஆட்சித்தலைவரின் முன்அனுமதியின்றி இதர பொருட்காட்சி மற்றும் கண்காட்சிகளும் நடத்தக் கூடாது என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும், திருமண மண்டபங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல் அரங்குகளின் உரிமையாளர்கள் முன்அனுமதியின்றி உணவுத்திருவிழாக்கள், விழாக்கால விற்பனை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய வணிக கண்காட்சி, விளையாடுமிடம், பொருட்காட்சி ஆகியவற்றை நடத்த அனுமதிக்கக் கூடாது. தொடர்புடைய துறை அலுவலர்கள் விதிமுறைகள் மீறப்படுகிறதா என்பதை கண்காணித்து, சட்ட விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.