Type Here to Get Search Results !

தேசிய ஊட்டச்சத்து மாத விழா - குறும்படம் தயாரிக்கும் போட்டி...


ஈரோடு மாவட்டம், திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா-2026 (நமது அங்கன்வாடி நமது பொறுப்பு) நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி,  அவர்கள் தலைமையில் இன்று  நடைபெற்றது.


நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருவதாகவும், இந்த ஆண்டு “நமது அங்கன்வாடி நமது பொறுப்பு” என்ற கருப்பொருளில் கொண்டாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


சத்தான உணவை உட்கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேபோன்று உடலுக்குத் தேவையான அளவில் சரிவிகித உணவை எடுத்துக்கொள்வதும் அவசியம் என தெரிவித்தார். வயது, உடல்நிலை, காலசூழல் மற்றும் வாழ்வியல் முறைக்கேற்ப பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்ட சிறுதானியங்கள் உள்ளிட்ட ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உணவில் சேர்த்துக்கொண்டு, அனைவரும் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.



சரிவிகிதமற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படும் வாழ்க்கைமுறை சார்ந்த பாதிப்புகளைத் தவிர்க்க விழிப்புணர்வை வளர்த்துக்கொள்வது அவசியம் என தெரிவித்த மாவட்ட ஆட்சித்தலைவர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் வளரிளம் பெண்களுக்கு தேவையான ஊட்டச்சத்து மற்றும் சுகாதார வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

மேலும், மாணவர்கள் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை தங்களது குடும்பத்தினர் மற்றும் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் விழிப்புணர்வு தூதர்களாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.


தொடர்ந்து, “சமுதாயத்தில் ஊட்டச்சத்து மேம்படுத்துவதற்கான உத்திகள்” என்ற தலைப்பில் நடைபெற்ற குறும்படம் தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவியர்களுக்கும், குறைந்த செலவில் அதிக ஊட்டச்சத்து உணவு தயாரிக்கும் போட்டியில் வெற்றி பெற்ற 3 மாணவியர்களுக்கும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பரிசுகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் திருமதி. பவித்ரா, திண்டல் வேளாளர் மகளிர் கல்லூரி செயலர் சந்திரசேகர், வேளாளர் மகளிர் கல்லூரி முதல்வர் திருமதி.முனைவர் ஆர்.பார்வதி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி.சாந்தி, ஈரோடு மாவட்ட பயிற்சி மருத்துவ அலுவலர் மரு. மகேஷ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.