ஈரோடு மாவட்டம், நம்பியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொன்னமடை, திட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் 09.09.2026 இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
நம்பியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பதிவேடுகள், பணியாளர்கள் வருகைப் பதிவேடு மற்றும் ஊராட்சி ஒன்றியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, நம்பியூர் கொன்னமடை சமூகநீதி அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை, மாணவர்களின் விவரப் பதிவேடு, மாணவர்களுக்கான உணவு வசதிகள், சமையலறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார்.
கொன்னமடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், மருந்து இருப்பு, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி, படுக்கை வசதி மற்றும் மருத்துவ பயனாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், மருத்துவமனைக்கு தினசரி வருகை தரும் மருத்துவ பயனாளர்களின் விவரப் பதிவேடு, மருத்துவக் கருவிகள் மற்றும் உபகரணங்களின் பயன்பாடு, மருத்துவப் பணியாளர்கள் விவரம், பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட விவரம் மற்றும் தொடர் கண்காணிப்பு பணிகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வு செய்தார். மருத்துவமனை மற்றும் அதன் சுற்றுப்புறங்களை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்குமாறு மருத்துவ அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, நம்பியூர் திட்டமலை பகுதியில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமூகநீதி மாணவியர்கள் விடுதி கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு, கட்டுமானப் பொருட்களின் தரம் மற்றும் மேற்கொள்ளப்பட வேண்டிய இதரப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஊரகவளர்ச்சி ரமேஷ் கிருஷ்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ஜாகீர் உசேன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.மகேஸ்வரன் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

.jpeg)
.jpeg)
.jpeg)
