ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அந்தியூர், பச்சாம்பாளையம், சூளைமேடு, கெட்டிசமுத்திரம், பள்ளிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கந்தசாமி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அந்தியூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் மற்றும் பணியாளர்களின் வருகைப் பதிவேடு உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அந்தியூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள் தரம் பிரிக்கப்படுவதையும், நெகிழிக் குப்பைகள் மறுசுழற்சி செய்யப்படுவதையும் பார்வையிட்டார்.
அந்தியூர் பேரூராட்சியில் செயல்பட்டு வரும் முழுநேர கிளை நூலகம் மற்றும் சங்கராப்பாளையம் ஊராட்சியில் செயல்பட்டு வரும் நூலகத்தையும் பார்வையிட்டு, அங்குள்ள புத்தகங்கள், பராமரிக்கப்படும் பதிவேடுகள், வாசகர்களின் எண்ணிக்கை மற்றும் தேவையான புத்தகங்கள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அந்தியூர் பேரூராட்சியில் உள்ள ஆதார் சேவை மையத்தை ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு வழங்கப்படும் ஆதார் தொடர்பான சேவைகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். சேவைகளைப் பெற வந்த பொதுமக்களிடம் நேரில் கலந்துரையாடி, சேவைகள் முறையாகவும் தாமதமின்றியும் வழங்கப்படுகிறதா என்பதையும் கேட்டறிந்தார்.
சூளைமேடு பகுதியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள கழிவறையை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர், அதன் தூய்மை, தண்ணீர் வசதி மற்றும் பராமரிப்பு குறித்து பார்வையிட்டார். கழிவறைகளை தினசரி முறையாக சுத்தம் செய்து, தேவையான தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
பச்சாம்பாளையம் பகுதியில் தேசிய எண்ணெய்வித்து அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு, பயிரின் வளர்ச்சி நிலை மற்றும் சாகுபடி முறைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து, சங்கராப்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு, வழங்கப்பட்டு வரும் சான்றிதழ்கள் மற்றும் பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதே பகுதியில் VPG ராம் ஜி திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைக்கும் பணிகளையும் பார்வையிட்டு, பணிகளை விரைவாக நிறைவேற்ற அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
அந்தியூர், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவ, மாணவியர்களின் விவரங்கள், உணவுப்பட்டியல், உணவின் சுவை மற்றும் தரம் உள்ளிட்டவற்றையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
கெட்டிசமுத்திரம் ஊராட்சி, ஆதிரெட்டியூர் பகுதியில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் செயல்பட்டு வரும் மணாலாத் தொகுப்பு தயாரிக்கும் மற்றும் விற்பனை கூடத்தை பார்வையிட்டு, அதன் விலை, தரம் மற்றும் தயாரிக்கும் முறைகள் குறித்து குழு உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார்.
அந்தியூர் தாலுகா வட்டக்காடு பகுதியில் சீமைக் கருவேல் மரங்கள் அகற்றும் பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர், அகற்றப்பட்ட பகுதிகளை முறையாக பராமரித்து, நிலங்களை பயனுள்ள வகையில் பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, சங்கராப்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நியாய விலைக்கடையில் பொதுவிநியோகப் பொருட்களின் இருப்பு, விற்பனை விவரம், பயனாளி குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் அளவு, கடையின் செயல்படும் நேரம் மற்றும் விடுமுறை நாட்கள் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வுகளின்போது அந்தியூர் வருவாய் வட்டாட்சியர் சக்திவேல், உதவி செயற்பொறியாளர் ரமேஷ் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.