Type Here to Get Search Results !

பவானி வட்டாரத்தில் கலெக்டர் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்ட ஆய்வு...


ஈரோடு மாவட்டத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க செயல்படுத்தப்பட்டு வரும் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ், பவானி வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் இன்று 16.09.2026 நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.




திப்பிசெட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கணினி வழியாக மாணவ, மாணவியர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருவதையும், மாணவர்களின் கற்றல் திறனையும் ஆய்வு செய்தார். மேலும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை “பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டம்” விரிவாக்கம் செய்யப்படுவதையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.


திப்பிசெட்டிபாளையம் நியாயவிலைக்கடையில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, காலாவதி நாள் மற்றும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்தார். ஜம்பை அரசு வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்துகளின் இருப்பு, கழிப்பறை, படுக்கை வசதி மற்றும் புறநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் பார்வையிட்டார்.



மேலும், மாவட்ட தொழில் மையம் சார்பில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் ரூ.3.15 இலட்சம் மானியம் பெற்று ஜம்பை பகுதியில் திரு.எம்.உதயகுமார் செயல்படுத்தி வரும் நூல் சுருட்டுதல் நிறுவனத்தை ஆய்வு செய்து, தயாரிப்பு முறை, இலாபம் மற்றும் திரும்ப செலுத்தப்படும் கடன் விவரங்களை கேட்டறிந்தார்.




பருவாச்சி சத்யா நகர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறன் மற்றும் மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். பள்ளி வளாகத்தில் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் மையத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை, வயதிற்கேற்ற எடை, உயரம், இணை உணவு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் பதிவேடுகளை பார்வையிட்டார்.



பருவாச்சி அரசு கால்நடை மருந்தகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கை, பயனடையும் கிராமங்கள், சிகிச்சை மற்றும் தடுப்பூசி விவரங்கள், மருந்துகளின் இருப்பு ஆகியவற்றை ஆய்வு செய்தார். தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் வேளாண் மற்றும் பயிர்க்கடன்கள், உரங்கள் மற்றும் வேளாண் இடுபொருட்கள் உள்ளிட்ட சேவைகள் குறித்தும் கேட்டறிந்தார்.










பவானி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பவானி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் மற்றும் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.



இத்திட்டத்தின் கீழ் நடைபெற்ற சிறப்பு முகாமில் 3 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், 3 பேருக்கு சாதிச்சான்றிதழ், ஒருவருக்கு பிறப்பிடச்சான்றிதழ், ஒருவருக்கு வருமானச்சான்றிதழ், 10 பேருக்கு காலதாமத இறப்பு பதிவிற்கான சான்றிதழ், ஒருவருக்கு சிறு/குறு விவசாயிக்கான சான்றிதழ் என மொத்தம் 19 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தகுமார், திட்ட இயக்குநர் (ஊரக வளர்ச்சி முகமை) செந்தில்குமரன். கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் சிந்துஜா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) ரமேஷ், இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்)  ப.கந்தராஜா, இணை இயக்குனர் (வேளாண்மை) சிவக்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முனைவர்.மான்விழி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு. அருணா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் ரமேஷ் கிருஷ்ணன் (வளர்ச்சி),  லோகநாதன் (வேளாண்மை). பவானி வருவாய் வட்டாட்சியர் கற்பகம் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.