Type Here to Get Search Results !

நியாயவிலைக் கடையில் பொதுவிநியோகப் பொருட்கள் இருப்பு குறித்து கலெக்டர் ஆய்வு...


ஈரோடு மாவட்டம், சாமிகவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற பொதுவிநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பொதுமக்களின் குடும்ப அட்டை மற்றும் பொதுவிநியோகத் திட்டம் தொடர்பான குறைகளைத் தீர்க்கும் வகையில், ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு மாதமும் பொதுவிநியோகத் திட்ட குறைதீர்க்கும் நாள் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மாவட்டத்தின் பல்வேறு நியாயவிலைக் கடைகளில் இன்று முகாம் நடைபெற்றது.


அதன்படி, ஈரோடு வட்டம் - சாமிகவுண்டம்பாளையம், பெருந்துறை வட்டம் - மடத்துப்பாளையம், மொடக்குறிச்சி வட்டம் - கோவிந்தநாயக்கன்பாளையம், கொடுமுடி வட்டம் - கோட்டைக்காட்டுவலசு, கோபிசெட்டிபாளையம் வட்டம் -  கூகலூர், நம்பியூர் வட்டம் - ஒலளக்கோவில், பவானி வட்டம் - சின்னபுலியூர், அந்தியூர் வட்டம் - பர்கூர்,  சத்தியமங்கலம் வட்டம் - சுஜில்கரை மற்றும் தாளவாடி வட்டம் - கெட்டவாடி ஆகிய நியாயவிலைக் கடைகளில் இம்முகாம்கள் நடைபெற்று வருகின்றன.   


இம்முகாம்களில் புதிய குடும்ப அட்டை கோருதல், நகல் குடும்ப அட்டை பெறுதல், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் செய்தல், கைபேசி எண்ணை மாற்றம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனுக்கள் அளித்தனர். பெறப்படும் மனுக்களை உரிய முறையில் பரிசீலித்து விரைந்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, சாமிகவுண்டம்பாளையம் நியாயவிலைக் கடையில் பொது விநியோகப் பொருட்களின் இருப்பு, விற்பனை விபரம், பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை, அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும் விபரம், கடையின் வேலை நேரம் மற்றும் விடுமுறை நாட்கள் உள்ளிட்டவை குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.

இம்முகாமில் துறை சார்ந்த அலுவலர்கள், நியாயவிலைக் கடை பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.