Type Here to Get Search Results !

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் - அமைச்சர் தொடங்கி வைத்தார்.


ஈரோடு மாவட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை முன்னிட்டு, கருங்கல்பாளையம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மாண்புமிகு கைத்தறி, துணி நூல் மற்றும் கதர்த்துறை அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள் காலை உணவினை வழங்கினார்.


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் திருவான்மியூர் சென்னை நடுநிலைப் பள்ளியில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, ஈரோடு மாவட்டத்திலும் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் தலைமை வகித்தார்.


பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் மூலம் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பசியின்றி கல்வி கற்கவும், அவர்களின் அறிவாற்றல் வளர்ச்சி பெறவும், மாணவர் வருகை அதிகரிக்கவும், மாணவர்களை தக்கவைக்கவும், வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்கு உதவியாகவும், குழந்தைகளின் உடல் நலம் பேணவும் ஊட்டச்சத்து உணவு வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில் ஏற்கனவே 1,208 பள்ளிகளில் 59,070 மாணவ, மாணவியர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகின்றனர். தற்போது 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மேலும் 423 பள்ளிகளில் 28,984 மாணவர்களுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,631 பள்ளிகளில் பயிலும் 88,054 மாணவ, மாணவியர்கள் பயன்பெற உள்ளனர்.


கருங்கல்பாளையம் காமராஜர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவை வழங்கிய அமைச்சர் விஜய் பாலாஜி அவர்கள், மாணவ, மாணவியர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். மேலும், அந்தந்த சட்டமன்றத் தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு மாணவர்களுக்கு காலை உணவை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் அர்பித் ஜெயின் , திட்ட இயக்குனர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) செந்தில்குமரன், முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர்.மான்விழி, மாநகராட்சி கண்காணிப்பு பொறியாளர் திருமதி.பாக்கியலட்சுமி, மாணவ, மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 




Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.