Type Here to Get Search Results !

மொடக்குறிச்சிபகுதிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு...


ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 46-புதூர், எழையாம்பாளையம், அவல்பூந்துறை, வடுகப்பட்டி, எழுமாத்தூர் மற்றும் துய்யம்பூந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



46-புதூர் ஊராட்சியில் ரூ.60.85 லட்சம் மதிப்பீட்டில் ஆனைக்கல்பாளையம் ரிங் ரோடு முதல் வெள்ளாளபாளையம் வரையிலான சாலை மேம்பாட்டுப் பணிகள் மற்றும் ரூ.79.03 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளாளபாளையம் சாலை முதல் கொல்லம்பாளையம்–நஞ்சை ஊத்துக்குளி சாலை வரையிலான பணிகளை ஆய்வு செய்தார். சாலையின் தரம், நீளம், அகலம், தடிமன் மற்றும் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.





எழையாம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் செயல்பட்டு வரும் தொடுதிரை வகுப்பறையை பார்வையிட்டு மாணவர்களின் கற்றல் திறனை கேட்டறிந்தார். மேலும், ரூ.8.21 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகள், அங்கன்வாடி மையம் மற்றும் சத்துணவுக் கூடத்தின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்தார்.




அவல்பூந்துறை பேரூராட்சிக்குட்பட்ட பாரதியார் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமுதாயக் கூடப் பணிகளையும், மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் நடமாடும் மருத்துவமனையையும் பார்வையிட்டார்.





வடுகப்பட்டி பேரூராட்சி பகுதியில் ரூ.539 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் மலக்கசடு சுத்திகரிப்பு நிலையப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.12.10 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 45 வீடுகளின் பணிகளையும் பார்வையிட்டார்.



எழுமாத்தூர் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் நூலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். மொடக்குறிச்சி வட்டார இயக்க மேலாண்மை அலகு அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.



மொடக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சேர்க்கை, வருகை, ஆசிரியர்களின் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் குறித்து ஆய்வு செய்து, கல்வித் தரத்தை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.





தொடர்ந்து, மொடக்குறிச்சி கிளை நூலகத்தில் அரசு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞர்களுடன் கலந்துரையாடினார். துய்யம்பூந்துறை, தொட்டிபாளையம் பகுதியில் ரூ.1.80 லட்சம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற்று விவசாயம் மேற்கொண்டு வரும் சென்னியப்பன் விவசாயியின் நிரந்தர கல்தூண் பந்தல் சாகுபடியையும் பார்வையிட்டு, சாகுபடியின் தற்போதைய நிலை மற்றும் நீர்ப்பாசன வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின்போது மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருநாவுக்கரசு, சுமித்ரா, உதவி பொறியாளர் அருண் கார்த்திக்,  வடுகப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர்கள் ரஹீம் கான்,பிரேம்நாத் மற்றும் அவல்பூந்துறை பேரூராட்சி அலுவலர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.